Monday, May 19, 2008

எங்கே போச்சு வெள்ளை??

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன்சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகு பாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கை யின்றி வாழக் கற்றாய்
அன்பைக் கூட அளந்து வைத்தாய்

ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…


-கவிநயா

10 comments:

  1. நன்கு அமைந்துள்ளது,
    கூடவே வெள்ளைப்பூக்கள் உலகினை

    நினைவுக்கு கொண்டு வந்தது!

    ReplyDelete
  2. மிகவும் அருமையான கவிதை கவிநயா.
    பால்யத்தின் வெண்மை கொஞ்சம் கொஞ்சமாக மறையும் பொழுததுவிலேயே அனைத்தும் கற்று வண்ணமாகி நிற்போம்.

    வண்ணங்களைப் பொறுத்துத்தான் அது அழகா,கறையா எனத்தெரியும்.

    மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள் சகோதரி :)

    ReplyDelete
  3. நன்றி ஜீவா. தொடுப்புக்கும் - அருமையான பாடல். எனக்கு ரொம்பப் பிடித்த வரிகள் இவை:

    //எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
    அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே!
    எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
    அங்கு கூவாயோ வெள்ளைக் குயிலே!//

    ReplyDelete
  4. //வண்ணங்களைப் பொறுத்துத்தான் அது அழகா,கறையா எனத்தெரியும்.//

    வழக்கம் போல அழகாய்ச் சொன்னீர்கள், ரிஷான்! நன்றி, தம்பி :)

    ReplyDelete
  5. கவிநயா,

    நல்ல கவிதை..

    நம்பிக்கை யின்றி வாழக் கற்றாய்
    அன்பைக் கூட அளந்து வைத்தாய் --
    மிகவும் பிடித்த வரிகள்..

    தொடக்கமும் முடியும் ஒன்றாய் ஆகிவிட்ட மனித வாழ்க்கையில் மனிதனின் மாறும் மனத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்....

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, கோகுலன் :)

    ReplyDelete
  7. கவிதை நன்று உள்ளது, வெள்ளை மனம் இழப்பதே இங்கு தகுதி என்றாகி விட்டபின், வெள்ளை மனதோடு இருப்பவன் பிழைக்கத்தெரியாதவன் என முத்திரை குத்தப்படுவான். எனவே இது காலத்தின் கட்டாயம், என்னதான் சொன்னாலும்

    மீண்டும் வருமோ வெள்ளை நிறம்
    வேண்டும் எனக்கு பிள்ளை குணம் !

    சரவணன்

    ReplyDelete
  8. //வெள்ளை மனதோடு இருப்பவன் பிழைக்கத்தெரியாதவன் என முத்திரை குத்தப்படுவான். //

    கசப்பான உண்மைதான் சரவணன். சரியா சொன்னீங்க.

    //மீண்டும் வருமோ வெள்ளை நிறம்
    வேண்டும் எனக்கு பிள்ளை குணம் !//

    நல்லது! அப்படியே ஆகட்டும்! :)

    ReplyDelete
  9. கள்ளமில்லா பிள்ளை மனம் மெல்ல மெல்ல வெள்ளை உள்ளத்தை இழக்கின்ற இயல்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  10. //கள்ளமில்லா பிள்ளை மனம் மெல்ல மெல்ல வெள்ளை உள்ளத்தை இழக்கின்ற இயல்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.//

    வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ராமலக்ஷ்மி!

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)