Friday, May 30, 2008

ஆரடிச்சா ஏனழுதாய்...

“இசை கேட்டால் புவி அசைந்தாடும்” அப்படின்னார் கண்ணதாசன். இசைக்கு மயங்காதவங்க யாரு? அதுவும் இசை மென்மையா மனதுக்கு இதமா இருக்கும்போது கண்கள் தானே சொருகாதோ? அப்படிப்பட்ட இசைதானேங்க தாலாட்டு! தாலாட்டுப் பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுல இருக்கற தமிழும், இயல்பா வந்து விழற சொற்களும், உவமைகளும், கதைகளும், அடடா... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்! எனக்குத் தெரிஞ்ச சில தாலாட்டுப் பாடல்களை உங்களோட பகிர்ந்துக்கணும்ங்கிறது என்னுடைய சின்ன ஆசை.

சின்னக் குழந்தைங்களுக்கு அம்மா குரல் எப்படி இருந்தாலும் இனிமைதான். ‘வீல்’னு கத்திக்கிட்டிருக்க குழந்தை அம்மாவோட அன்புக் குரல் கேட்டோன்ன பொட்டிப் பாம்பா அடங்கிடும்! அம்மாவுக்கு பாடத் தெரிஞ்சிருக்கணும்கிற அவசியமே இல்லை! என் பிள்ளை கூட நான் பாடினதைக்(!) கேட்டு தூங்கியிருக்கான்! (இப்ப அவன்கிட்ட வாயே திறக்க முடியாதுங்கிறது வேற விஷயம் :)

இந்த சமயத்துல ஒண்ணு சொல்லியே ஆகணும். நம்ம குமரன் இருக்காரே, அவர் தன் குழந்தைங்களுக்கு திருப்பாவை மாதிரியான சமய இலக்கியப் பாடல்களையெல்லாம் தாலாட்டா பாடுவாராம்! எவ்ளோ க்ரேட் பாருங்க! இதைக் கேட்டோன்ன அசந்தே போய்ட்டேங்க!

எங்க ஊர்ப்பக்கமெல்லாம் இப்பவும் விசேஷங்களுக்கு சின்னச் சின்ன புத்தகங்கள் போட்டுக் கொடுக்கிற பழக்கம் இருக்கு. அப்படி ஒரு முறை ஒரு அறுபதாவது கல்யாணத்துக்கு தாலாட்டுப் பாடல்களைத் தொகுத்துக் கொடுத்தாங்க! வித்தியாசமான, எனக்குப் பிடிச்ச, யோசனை!

தாலாட்டுங்கிற தலைப்புல நான் தரப் போறதெல்லாம் எனக்கு என் அம்மா பாடி, நான் என் பிள்ளைக்குப் பாடினதும், அப்புறம் நான் மேல சொன்ன புத்தகத்துல இருக்கறதும்தான். அதனால காப்பிரைட் ப்ரச்னை வராதுன்னு நெனக்கிறேன்! :) உங்களுக்கு தெரிஞ்ச தாலாட்டுகளையும் பகிர்ந்துக்கோங்க!

அவசர உலக அம்மாக்களே! இனியாவது, “தாலாட்டா? எனக்கு தெரியாதே” அப்படின்னு எஸ்கேப் ஆகாம குழந்தையை அன்பா ஆசையா தூங்க வைப்பீங்கன்னு நம்பறேன்!


ஆராரோ, ஆரிரரோ - 1


ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு

கண்ணே என் கண்மணியே
கடிந்தாரைச் சொல்லி அழு

விளக்கிலிட்ட வெணையைப் போல்
வெந்துருகி நிற்கையிலே

கலத்திலிட்ட சோறது போல்
கண்கலக்கம் தீர்த்தாயே

கொப்புக் கனியே
கோதுபடா மாங்கனியே

ஏனழுதாய் என்னுயிரே
ஏலம்பூ வாய் நோக

பாலுக்கழுதாயோ
பவழ வாய் முத்துதிர

தேனுக்கழுதாயோ
கனிவாயில் தேனூற

வம்புக்கழுதாயோ
வாயெல்லாம் பால் வடிய

அத்தை அடித்தாளோ
அல்லி மலர்த் தண்டாலே

மாமன் அடித்தானோ
மல்லிகைப் பூச் செண்டாலே

அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்

கடிந்தாரைச் சொல்லி அழு
கைவிலங்கு போட்டு வைப்போம்

தொட்டாரைச் சொல்லி அழு
தோள்விலங்கு போட்டு வைப்போம்

மண்ணால் விலங்கு பண்ணித்
தண்ணீரிலே போட்டு வைப்போம்

வெண்ணையால் விலங்கு பண்ணி
வெய்யிலிலே போட்டு வைப்போம்!

--

ஹலோ! தூங்கிட்டீங்களா! தாலாட்டு முடிஞ்சிருச்சுங்கோ!! :)

Tuesday, May 27, 2008

அன்பாயிருக்கக் கத்துக்கணும்!

அடுத்த பதிவா அன்பைப் பத்தின இந்தக் கவிதையைப் போடணும்னு ஏற்கனவே யோசிச்சு வச்சிருந்தேன். அன்பு என்பது எவ்வளவு அழகான விஷயம்! இயல்பான விஷயம்! அட, நான் மட்டும் சொல்லலீங்க. நம்ம பாரதியார் கூட அப்படித்தான் சொல்லியிருக்காரு. வேணுன்னா நம்ம எஸ்.கே. அண்ணாவோட பதிவைப் பாருங்க. சொல்லி வச்சாப்ல அவரும் நேத்து இதைப் பத்திதான் எழுதியிருந்தாரு.

அன்பு அழகான, இயல்பான விஷயம் மட்டுமில்லை. வரவர அரிதான விஷயமாகவும் ஆகிக்கிட்டு இருக்கு. இப்ப நாட்டுல, உலகத்துல நடக்கற நடப்புகளையெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே வேதனையா இருக்கு. மனிதாபிமானம்னா என்ன விலைன்னு கேட்கிற நிலை உருவாகிக்கிட்டிருக்கு :(

அன்பு செய்வது என்ன அவ்வளவு கடினமா? ஒரு சின்னப் புன்னகை. ஒரு கன்னல் வார்த்தை. அதைப் பிறருக்குத் தருவதில் என்ன சிரமம்? கனியிருக்க ஏன் காய் கவர்ந்துகிட்டே இருக்கோம்? புரியல. ஐயன் அன்புடைமைன்னு ஒரு அதிகாரமே எழுதி வச்சுட்டாரு. அதுக்கு மேல யாரால என்ன சொல்ல முடியும்? நல்ல விஷயங்களை அப்பப்ப நினைவுபடுத்திக்கணுமில்லையா? அதுக்கான சிறிய முயற்சிதான் இதுவும்!

அன்பொன்று செய்து விட்டால் அவனியிலே துயரம் இல்லை! அன்பு செய்வோம்! அதை இன்று செய்வோம்! என்றும் செய்வோம்!




அன்பு

வறண்ட நிலத்தின் மேல்
வான் பொழியும் பூச்சொரியல்!

கனத்த மனதிற்கு
மருந்திடும் மென் மயிலிறகு!

துன்பத்தின் சாயலையும்
துரத்தி விடும் தேவதை!

இன்பத்தை வரவழைத்து
இதம் தரும் இன்னிசை!

சுட்டெரிக்கும் வெயிலினிலே
சுகந் தரும் ஆலமரம்!

அலைக்கழியும் மனதிற்கு
அமைதி தரும் நந்தவனம்!

அன்பு –

ஒரு அதிசயம்!
அது ஒரு அக்ஷய பாத்திரம்!

எடுக்க எடுக்க நிறையும்!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!


--கவிநயா

Monday, May 26, 2008

கந்தா! கடம்பா!!

எங்க ஊர் கோவில்ல வள்ளி திருமணம் நடந்தப்போ, நான் எழுதி, எங்க ஊர் பிரபல பாடகிகளான மீனாவும், சித்ராவும் இசையமைச்சுப் பாடிய முருகன் பாடலின் ஒலிப்பதிவு இதோ! இந்தப் பாடல் ராகமாலிகையில அமைக்கப்பட்டிருக்கு. பயன்படுத்தியுள்ள ராகங்கள்: பௌளி, சஹானா, அமீர்கல்யாணி, அடானா, ரேவதி, நாட்டைக்குறிஞ்சி, ரீதிகௌளை, ஹம்ஸநாதம், மற்றும் தேஷ். பாடலின் வரிவடிவம் இங்கே! கேட்டு விட்டு கருத்துச் சொன்னால் மகிழ்வோம்!


Thursday, May 22, 2008

டாக்டர் இல்ல நர்சும் இல்ல, நானாப் பொறந்தேன்...


நேத்து சாயந்திரம் ஒரு குட்டிக் குருவிக் குஞ்சை எங்க வீட்டு முன்னாடி இருக்க தோட்டத்துல பார்த்தேன். பக்கத்துல ஒடஞ்ச முட்டை ஓடு! அப்பதான் வெளிய வந்திருந்தது போல. தன்னோட குட்டி வாயைத் திறந்து, "ஆவ், ஆவ்"னு கத்திட்டிருந்தது. அது கத்தறது அதுக்கே கேட்டிருக்காது :( அம்மாக் குருவி எங்க போச்சுன்னு தெரியல. குருவிக் குஞ்சால நடக்கவும் முடியல; பறக்கவும் முடியல; கத்தவும் முடியல. என்னதான் செய்யும், பாவம்? அம்மாவா வந்து அதைக் காப்பாத்தினாதான் உண்டு. எனக்கோ ரொம்பப் பாவமா இருந்தது. ஆனா அதுக்கு எப்படி உதவறதுன்னு தெரியல. பக்கத்திலேயே இருந்தா அம்மாக் குருவி பக்கத்தில வராதுன்னு நினைச்சு நகர்ந்துட்டேன்.

பேசத் தெரிஞ்சிருந்தா இப்படித்தான் அந்தக் குருவிக் குஞ்சு அதோட அம்மாகிட்ட சொல்லியிருக்கும்!


டாக்டர் இல்ல நர்சும் இல்ல
நானாப் பொறந்தேன்
செறகு இன்னும் மொளக்கல
ஒன்னத் தேடி அழுதேன்

காலிருந்தும் சக்தியில்ல
நடக்க முடியல
கண்ணிருந்தும் ஒன் எடத்த
பாக்க முடியல

கத்தி ஒன்னக் கூப்புடவும்
கொரலும் எழும்பல - நீதான்
வந்து என்னக் காப்பாத்தணும்
வேற வழியில்ல


காலைல போய்ப் பார்த்தப்ப அது இறந்து கெடந்தது :,((( இந்த மாதிரி சமயத்துல வேற என்ன செய்யலாம்? உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க...

Wednesday, May 21, 2008

அன்னையவள் அழகுக்கு ஈடேது!


பொன்ஒளிரும் மஞ்சள் முகம்
பூஒளிரும் மதி வதனம்
பிறை ஒளிரும் முடிமீதினில்(1)

விழிகளிலே கருணை பொங்க
இதழ்களிலே முறுவல் தங்க
மனங்கவரும் ஜகன் மோகினி(2)

வில் பழிக்கும் புருவங்கள்
வேல் பழிக்கும் கருவிழிகள்
குவளைப்பூ பழிக்கும் இமைகள்(3)

சிமிழ் போன்ற சிறுநாசி
செம் பவழக் கன்னங்கள்
சிவந்திருக்கும் சின்ன இதழ்கள்(4)

தங்க மணித் தாரகைகள்
செவி யிரண்டை அலங்கரிக்க
செந்தூரப் பொட் டொளிர(5)

கார்மேக மையெடுத்து
கண்மீன்கள் எழுதிக்கொள்ள
விண்மீன்கள் வியந்து நோக்க(6)

காற்றோடு கதைபேசி
காதுரசும் கூந்தல்நறு
மணத்திற்குப் பூக்கள் ஏங்க(7)

வெண்சங்கு வழவழப்பை
தோற்கடிக்கும் கழுத்தினிலே
கர்வமுடன் அணிகள் மின்ன(8)

திருமேனி மென்மையதை
தீண்டியதும் பட்டாடை
நாணம்கொண்டு சிவந்திருக்க(9)

வானரசி மனம் கவர
தானுரசிச் சிரித்தபடி
கைவளைகள் கலகலக்க(10)

பாசமும் அங் குசமும்
தேவியவள் கரங்களிலே
பதவிசாய் அமர்ந்திருக்க(11)

இல்லாத கொடியிடையை
ஒய்யார ஒட்டியாணம்
இருப்பதாய்க் காட்ட முயல(12)

சின்னமணி நூபுரங்கள்
செல்லமாய்ச் சிணுங்கியவள்
செம்பிஞ்சுப் பாதம் கொஞ்ச(13)

விரலொட்டி வளைந்திருக்கும்
சிறுமெட்டி சிரத்தையுடன்
திருப்பாதம் அலங்கரிக்க(14)

கற்பூர ஜோதியிலே
என்அன்னை உன்வதனம்
காந்தம் போல் கவர்ந்திழுக்க(15)

உன்னையன்றி ஒருநினைவு
எனக்கெதற்கு என்றுமனம்
உருக உனைச் சரணடைந்தேன்(16)

Monday, May 19, 2008

எங்கே போச்சு வெள்ளை??

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன்சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகு பாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கை யின்றி வாழக் கற்றாய்
அன்பைக் கூட அளந்து வைத்தாய்

ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…


-கவிநயா

Wednesday, May 14, 2008

ரெண்டாந்தாரம் கட்டப் போறோம்... வந்து வாழ்த்துங்க!

வாங்க, வாங்க. நீங்க கண்டிப்பா வருவீகன்னு தெரியுமுங்க. இப்பிடி வந்து இருங்க. இந்த ஏழயோட அழப்ப மதிச்சு நீங்கல்லாம் வந்ததே ரொம்ப சந்தோசமுங்க.

வேற ஒண்ணுமில்லீங்க; நம்ம முருகஞ்சாமி இருக்காகல்ல? அவுகளுக்குதேன் நம்ம வள்ளியம்மையை ரெண்டாந்தாரமாக் கட்டலாமுன்னு இருக்கமுங்க. இங்ஙனதேன் - நம்ம ரிச்மண்டுல. வார ஞாயித்துக் கெழமைதேன். அட, இன்னைக்கே வந்துட்டமேன்னு நெனக்கிறீக போல. பரவாயில்லீங்க. ரெண்டு நா இருந்துட்டுதேன் போறது...

வந்தது வந்தீக. வந்ததுக்கு அன்பளிப்பா இந்தப் பாட்டைப் படிச்சுப் போட்டுப் போங்க... (முடிஞ்சா) எப்பிடி இருக்குன்னு சொல்லிட்டுப் போனீகன்னா சந்தோசப்படுவனுங்க.

***

வேற ஒண்ணுமில்ல; எல்லாரும் விதவிதமா தலைப்பு வைக்கிறதப் பாத்து நமக்கும் ஆசை வந்துடுச்சு :) எங்க ஊர்ல முருகன் வள்ளி தெய்வானையோட உற்சவ மூர்த்தியாதான் இருக்காரு. புதுசா கட்டப் போற கோவில்ல, முருகன் சந்நிதி வைக்கணும்னு ரொம்ப முயற்சி செய்துக்கிட்டிருக்கோம். அதை மனசில் வச்சு, வள்ளி கல்யாணத்தப்ப பாடறதுக்காக நான் எழுதின பாடல்தான் இது. எங்க ஊர் இசையமைப்பாளர்கள் இசையமைச்சு, எங்க ஊர்ப் பாடகிகளே பாடப் போறாங்க. முடிஞ்சா நீங்களும் வந்து பாருங்க; கேளுங்க; வாழ்த்துங்க! கல்யாணச் சாப்பாடும் கண்டிப்பா உண்டுங்க!

***

வர வேண்டும் முருகா!

கந்தா கடம்பா கார்த்திகை பாலா
செந்தில் நாதா சிங்கார வேலா
மலைமகள் பார்வதி மனம்மகிழ் புதல்வா
குறவள்ளி காதலில் குழைந்திட்ட குமரா (1)

தேவர்கள் மனம்குளிர தெய்வயானை தன்னை
மாயவன் மருகனே மணம்புரிந்து கொண்டாய்
திருப்பரங் குன்றத்தில் திருக்கரம் பிடித்தாய்
திக்கெட்டும் போற்றிட பக்கத்தில் இருந்தாய் (2)

அலைவாயின் கரையோரம் அருள்செய்ய வந்தாய்
வினையாவும் தீர்த்தருள வேல்கொண்டு நின்றாய்
சூரபன் மாதியரை சம்ஹாரம் செய்தாய்
திருச்செந் தூரினிலே திருக்காட்சி தந்தாய் (3)

ஆனைமுக அண்ணனிடம் தான்கோபம் கொண்டாய்
அருள்ஞானப் பழமாகி பழநியிலே நின்றாய்
ஆவினன் குடியினிலே வேடர்குல மகளுடன்
அடியவர்க்கு அருளிடத் திருவுளம் கொண்டாய் (4)

பிரம்மாவின் செருக்கடக்கி வெஞ்சிறையில் அடைத்தாய்
ப்ரணவத்தின் பொருளதனைச் சிவனுக்குச் சொன்னாய்
அருணகிரி நாதர்க்கு அரும்பேற்றை அளித்தாய்
சுவாமிமலை நாதனே சிந்தையில் நிறைந்தாய் (5)

தணிகைமலை மீதினில்சி னம்தணிய அமர்ந்தாய்
விராலிமலை மீதினில்வ சிஷ்டர்க்கு அருள்செய்தாய்
குன்றுதோ றும்நின்று குறைதீர்க்க மனம்வைத்தாய்
நன்றுசெய்யும் நல்லோர் நினைவினில் நிலைத்திட்டாய் (6)

கருநாவல் பழம்கொண்டு கதையொன்று செய்தாய்
தமிழ்ப் பாட்டி ஔவைக்குத் தமிழ்கற்றுத் தந்தாய்
சிலம்பாறு சிரித்தோடும் சோலைமலை மீதினில்
சிங்கார வேலனே சிலையாகி நின்றாய் (7)

முப்புரம் எரித்திட்ட முக்கண்ணன் மைந்தா
செப்பினோம் உந்தன்புகழ் செந்தமிழ்ச் செல்வா
பாடினோம் உன்பெருமை பார்வதியின் பாலா
நாடினோம் உன்னடிகள் நலம்தருவாய் வேலா (8)

ஆறுபடை வீட்டிலே அருள்செய்யும் முருகா
மலைதோறும் வீற்றிருக்கும் மாலவனின் மருகா
குன்றில்லை யென்றாலும் ரிச்மண் டிலும்வந்து
குடியிருக்க வேண்டுகிறோம் குறவள்ளி நாதா (9)

***

--கவிநயா

Monday, May 12, 2008

இன்னா செய்தாரை...

இரண்டு நாளாக வீட்டில் அடைந்து கிடக்கும் கணவனைப் பார்த்தால் கவலையாக இருந்தது, கவிதாவுக்கு. சுந்தர் இப்படித் துவண்டு போய்ப் பார்த்ததே இல்லை, அவள். எந்த ப்ரச்சினையானாலும் இலகுவாக எடுத்துக் கொள்வான். எப்போதும் புன்னகை மலர்ந்த முகம். அன்பு நிறைந்த மனம். யாராயிருந்தாலும் ஓடி உதவும் குணம். இறை நம்பிக்கை நிறையவே உண்டு. அவளுக்கே அடிக்கடி தோன்றும், “இப்படி அநியாயத்துக்கு நல்லவனாக இருக்கிறானே”, என்று.

“சுந்தர், நடந்தது நடந்துடுச்சு. நீங்களே இப்படி மனசு உடைஞ்சிட்டா எப்படி? நாளைக்காச்சும் ஆஃபீஸ் போக வேணாமா?”, கனிவுடன் கேட்டபடி, அவன் நெற்றி முடியை ஒதுக்கி விட்டாள்.

குழந்தையைப் போல் அவள் மடியில் தலை வைத்து, அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டான். “ஆஃபீஸ் போறதை நினைச்சாலே பயமா இருக்கு, கவி. அவன் முகத்துல விழிக்கணுமே. கோவத்துல ஏதாச்சும் கன்னா பின்னான்னு பேசிட்டேன்னா?”

“நீங்க அப்படியெல்லாம் நிதானிக்காம பேசிட மாட்டீங்க சுந்தர். எனக்குத் தெரியும் உங்களைப் பத்தி. சரி... எழுந்து வாங்க. ஒரு மாறுதலுக்கு கொஞ்சம் வெளில போய், நடந்துட்டு வரலாம் வாங்க. மத்ததெல்லாம் பிறகு பேசிக்கலாம்”, அவனை வலுக்கட்டாயமாய் எழுப்பி, குளியலறைக்குள் தள்ளினாள்.

“கிளம்புங்க. நான் போய் காஃபி போடறேன்”

அன்பு மனைவியுடன் கைகோர்த்தபடி வெளியில் நடக்கையில் மனசு கொஞ்சம் சமனப் பட்டது போல் தோன்றியது. இரண்டு நாளாக வீட்டில் அடைந்து கிடந்ததால், வெயில் எப்போதையும் விட அதிகமாய் முகத்தில் அடிப்பது போல் இருந்தது. சாயந்திரம் ஐந்து மணிக்கு இப்படி ஒரு வெயில்!

வெயிலுடன் போட்டி போட்டுக் கொண்டு மனதை அறையும் நினைவுகள். நடந்ததை நினைக்கவே பிடிக்கவில்லை; ஆனால் நினைவுகள் நம்மைக் கேட்டா வருகின்றன? இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா? நம்ப முடியாத ஆச்சர்யம். அடக்க இயலாத ஆத்திரம்.

வேறொன்றுமில்லை; ஒற்றை வரியில் சொல்வதானால், அவன் அலுவலகத்தில், அவன் உற்ற நண்பன் ரகு, நல்லவன் என்று கருதியிருந்தவன், கூட இருந்தே குழி பறித்து விட்டான். இவன் மாதக் கணக்கில் மாடாக உழைத்த உழைப்பின் பெருமையெல்லாம் ஒரே நொடியில் ரகுவுக்கு கிடைத்து விட்டிருந்தது. நாணயம், நேர்மை தவிர வேறு மாதிரி நினைத்துப் பார்க்கவே தெரியாத சுந்தருக்கு இது எதிர்பாராத பேரிடியாக விழுந்ததில் ஆச்சர்யமில்லை. சரி, அது மட்டுமென்றாலும் விட்டு விடலாம், ஆனால் இவனுடைய மேலாளர், அவனோடு ஒப்பிட்டு பலர் முன்னிலையில் இவனை இழிவாகவும் வேறு பேசி விட்டார். அப்போதே ராஜினாமாக் கடிதம் ஒன்று எழுதி ஒப்படைத்து விடலாம் போல ரத்தம் கொதித்தது. ஆனால் அவ்வளவு கோபத்தில் எது செய்தாலும் தவறாகப் போய்விடுமென்றுதான் மிகவும் சிரமப்பட்டு பொறுமை காத்தான். அந்தத் தாக்கத்தில்தான் இரண்டு நாளாக விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கிறான். நல்லவனாக இருக்கும் முயற்சியில், ஏமாளியாகி விட்டேனோ என்று நினைப்பு ஓடியது.

இருவரும் நடந்து கொண்டே குழந்தைகள் பூங்காவின் அருகில் வந்து விட்டார்கள். சின்னஞ்சிறு சிட்டுகள் போல் கவலையின்றித் திரியும் இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே இருந்து விடலாம் என்று தோன்றியது.

“ஏய், அதைக் குடு. அது என்னோடது”
“மாட்டேன், அது என்னோடது. என் அப்பா எனக்கு வாங்கிட்டு வந்தார்”

இரண்டு பிள்ளைகள் ஒரே பந்துக்கு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“போ. என்னோடது” என்று பெரியவனாக இருந்த பிள்ளை, சின்னவனைத் தள்ளி விட்டான். சின்னவன் ஊஞ்சலில் போய் இடித்துக் கொண்டு விட்டான்! நல்ல வேளை வேகமாக இடிக்கவில்லை என்ற நினைப்புடன், சுந்தர் பதற்றத்துடன் பக்கத்தில் போகும் முன், பெரியவன் ஓடிச் சென்று சின்னவனைக் கை கொடுத்துத் தூக்கினான்.

“அச்சச்சோ. அடி பட்டுடுச்சா? ஸாரிடா”
“பரவாயில்லை. அடி படல. இந்தா நீயே வச்சுக்கோ.” சின்னவன் பெரியவன் கையில் கொடுத்தான். காயப் படுத்தியவனுக்கே கரிசனத்தோடு பந்தைத் தரும் குழந்தை மனம்!

“வேண்டாம். நீ போடு; நான் பிடிக்கிறேன்”, பந்தை மறுபடியும் சின்னவன் கையில் கொடுத்து விட்டு சிறிது தூரம் தள்ளிப் போய் நின்று கொண்டான்.

கொஞ்ச நேரம் கவிதாவும் அவனும் அங்கேயே ஒரு பெஞ்சில் அமர்ந்து பிள்ளைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, இருட்டும் நேரத்தில் கிளம்பினார்கள்.

வீட்டுக்குள் நுழைந்து கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு பூஜை அறைக்குச் சென்று கண்களை மூடி ஒரு நிமிடம் நின்றான். “எனக்கு என்ன குறை?” என்று தோன்றியது. “அன்பான குடும்பத்தினர், வரமாய் வந்த மனைவி, அருமையான நண்பர்கள் (ரகுவைத் தவிர என்ற நினைப்பைத் தவிர்க்க முடியவில்லை), இப்படிப் பல விதத்திலும் நிறைவாகத்தான் இருக்கிறது, வாழ்க்கை. அப்படி இருக்கும் போது பூங்காவில் பார்த்த குழந்தையின் பெருந்தன்மையை, வெள்ளை மனதை, நானும் பழகிக் கொண்டால்தான் என்ன?” என்று தோன்றியது.

ரகுவின் அம்மா குடல் புற்று நோயால் அவதிப்பட்டு வருவது இவனுக்குத் தெரியும். அந்த நினைப்பு வந்தவுடன், “இந்த ரகு ஏன் இப்படிச் செய்தான்?” என்று மறுபடியும் தோன்றியது. ஆனால் இம்முறை ரகுவின் மேல் கோபத்தை விடவும் வருத்தம்தான் அதிகம் இருந்தது. “ரகுவும் அவன் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்”, என்று மனதார வேண்டிக் கொண்டான்.

மனம் இலேசாக இருந்தது.


--கவிநயா

Friday, May 9, 2008

தோற்றம்

உள்ளுக்குள்ளே கொதித்துக்
குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது...

தகதகக்கும் தங்கக் குழம்பு
தளதளத்து ஆங்கரித்து
கூண்டுப் புலியாய்…
வெளியேற வழியின்றி –

நீரில் முழுகி மூச்சுத் திணறி
சுவாசத்திற்குத் தவிக்கும்
உயிரைப் போல்
தவித்துத் தத்தளித்து –

மதங் கொண்ட களிறாய்
கட்டுக் கடங்காமல்
கொந்தளித்துக் கனன்று –

பொறாமையில் புகையும்
மனிதர் போல்
அனல் காற்றை
பெருமூச்சாய் விட்ட வண்ணம் –

காட்டு வெள்ளமாய்ப்
பொங்கிப் பெருகி
தொட்டதையும் பட்டதையும்
பொசுக்கிச் சாம்பலாக்கும் நாளை
ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டு –

ஆயினும்
வெளிப் பார்வைக்கு என்னவோ
மிக அமைதியாகத்தான் தெரிகிறது
எரிமலை…


--கவிநயா

Monday, May 5, 2008

அம்மா மனசு

குழந்தை அழுகிறாளோ? கண்கள் மூடியே இருக்க, கை தன்னிச்சையாக அருகில் துழாவியது, தட்டிக் கொடுக்க. காலியான படுக்கையில் கை ‘பொத்’தென்று விழவும், ‘சட்’டென்று கண் விழித்தாள். ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை. சுவரில் கடிகாரம், இரவு பத்து மணி என்றது.

“சே, இந்த நேரத்தில் இப்படித் தூங்கிப் போனோமே?” தன்னைத்தானே கடிந்து கொண்டபடி எழுந்து அமர்ந்தாள். “ஃபோன் பண்ணிப் பார்க்கலாமா?” என்று எண்ணம் ஓடியது. “வேண்டாம், இந்நேரம் தூங்கியிருப்பாங்க”, பதிலும் தானே சொல்லிக் கொண்டாள்.

அவள் குழந்தை ப்ரியா, அவள் தோழி வினிதா வீட்டில் இருக்கிறாள். ஒன்றரை வயதுதான் ஆகிறது; அதற்குள் என்ன துறுதுறுப்பு! குழந்தையை நினைத்ததும் வித்யாவின் முகத்தில் புன்னகை அரும்புகிறது. அவளைப் பார்த்தவுடன் மாயக் கண்ணனைப் பார்த்தது போல் மக்கள் அவளிடம் மயங்கி விடுகிறார்கள். அப்படி மயங்கியவர்களில் ஒருத்திதான் வினிதா.

ஆனால் வினிதா மட்டும் மயங்கவில்லை; குழந்தையும்தானே அவளிடம் மயங்கி விட்டாள்!நினைப்பிலேயே நெற்றி சுருங்குகிறது. குழந்தைக்கு வினிதாவிடம் ஏனோ அப்படி ஒரு ஒட்டுதல். அவளைப் பார்த்து விட்டால் போதும், அம்மாவிடம் கூட வர மாட்டாள். வித்யாவுக்கு அந்த விஷயத்தில் வினிதா மேல் பொறாமைதான்.

“என் பிள்ளையை என்னிடமே வர விடாம என்னடி சொக்குப் பொடி போட்டு வச்சிருக்கே?” என்று பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாகக் கேட்பாள்.

இன்றைக்குக் காலையில் கோவிலுக்குப் போயிருக்கையில் வினிதாவும் வந்திருந்தாள். அவளைப் பார்த்தவுடன் குழந்தை அவள் கால்களைக் கட்டிக் கொண்டு விடவே இல்லை. அவளைத் தூக்கச் சொல்லி ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டாள். பிறகு அவள் இடுப்பிலிருந்து இறங்கவே இல்லை. அவளுடனேயே போக வேண்டுமென்று ஒரே அடம்.

“அக்கா, ப்ளீஸ்க்கா. ப்ரியாக் குட்டியை நான் வீட்டுக்குக் கூட்டிப் போறேன்க்கா. இன்னிக்கு மட்டும்… ப்ளீஸ்…”, கெஞ்சிக் கேட்டாள்.

ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாள், இவளுக்குத்தான் மனசே இல்லை. இவளைக் காட்டிலும் இவள் கணவன் குழந்தையை விட்டு இருக்கவே மாட்டான். இன்றைக்கு அவன் வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கிறான். இரண்டு நாளாகும், வர. அதனால் அரை மனதாகச் சம்மதித்தாள். கூடவே வைத்திருக்கும் மாற்றுத்துணி, விளையாட்டுச் சாமான், எல்லாவற்றையும் வினிதாவிடம் ஒப்படைத்தாள், குழந்தையுடன். ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு என்ன தேவை என்று பட்டியலிட்டாள்.

“எதுவாயிருந்தாலும் உடனே ஃபோன் பண்ணு. சரியா. பத்திரம்”, என்று ஆயிரம் முறை சொல்லி, மனசே இல்லாமல் வழி அனுப்பி வைத்தவள்தான்.

இதுவரை எந்த ஃபோனும் வரவில்லை. இவளும் குருட்டு யோசனை பண்ணிக் கொண்டே தூங்கிப் போயிருக்கிறாள். குழந்தை இனி நம்மைத் தேட மாட்டாளோ என்று மனசு சஞ்சலப் பட்டுக் கொண்டே இருக்கிறது. அம்மாவை விட இன்னொருவர் மேல் எப்படி அவ்வளவு பிடித்தம் ஏற்படும்? ஒரு வேளை நான் நல்ல அம்மாவாக இல்லையோ? வினிதா அளவு அவளை நான் பார்த்துக் கொள்வதில்லையோ? குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். ஒரு வேளை என் அன்பு பற்றவில்லையோ? எது எப்படியானாலும் சரி, காலையில் முதல் வேலையாக ப்ரியாக் குட்டியைக் கூட்டி வந்து விட வேண்டியதுதான். ப்ரியாக் குட்டி பிறப்பதற்கு முன் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதே அவளுக்கு மறந்து விட்டிருந்தது.

கண்டதையும் யோசித்து தலை வலித்தது. மாத்திரை போட்டுக் கொள்ளலாம் என்று எழுந்திருக்கையில், தொலைபேசி அழைத்தது. வினிதாதான். குழந்தை எப்படி இருக்கிறாள் என்று இவள் கேட்கும் முன்,

“அக்கா, குழந்தை ரொம்ப அழறா. சாயந்திரம் வரை நல்லாதான் விளையாடிக்கிட்டு இருந்தா. ஆனா இப்ப ராத்திரி எதுவும் சாப்பிடல; தூங்கவும் மாட்டேங்கிறா. நானும் ரொம்ப நேரம் சமாளிச்சுப் பார்த்துட்டு, முடியாதனால உங்களைக் கூப்பிடறேன்”

குழந்தை அழுவதைக் கேட்டு சந்தோஷப்படும் முதல் அம்மா நானாகத்தான் இருப்பேன், என்று எண்ணமிட்ட வண்ணம், அதே சமயம், அழுகிறாளே என்ற பதட்டத்துடன், “ரொம்ப அழறாளா வினிதா? கொஞ்சம் பொறு… இப்பவே ஆட்டோ பிடிச்சு வந்துடறேன்…”

“இல்லக்கா. ராத்திரில நீங்க தனியா வர வேண்டாம். நான் என் கணவரோட வந்து குழந்தையை விடறேன். ரொம்ப ஸாரி அக்கா”

“பரவால்ல வினிதா. பாவம் உனக்குத்தான் சிரமம். பத்திரமா வாங்க.”

தொலைபேசியை வைத்து விட்டு அழைப்பு மணிக்குக் காத்திருக்க ஆரம்பித்தாள். தலைவலி காணாமல் போயிருந்தது.


--கவிநயா