Wednesday, April 23, 2008

அவளைப் போல்...

பவித்ராவுக்கு அன்றுதான் அரை ஆண்டுத் தேர்வு மதிப்பெண்கள் வந்தன. கணக்கில் 94, ஃபிசிக்ஸில் 90, என்ற ரேஞ்சில் மார்க்குகள் இருந்தன. பக்கத்து ஸீட் ஷாலினி வழக்கம் போல் கணக்கில் 100, மற்ற சப்ஜெக்டுகளில் எல்லாம் முதல் மார்க். மிஞ்சி மிஞ்சிப் போனால் 6 அல்லது 7-வது ராங்க்தான் வருவாள், பவித்ரா. அன்று வீட்டுக்குப் போவதை நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு. +2-வில் அவள் படிக்கும் *இலட்சண*த்தைப் பற்றி இன்று சரியான மண்டகப்படியும், பெரீய்ய பிரசங்கமும் கேட்க வேண்டியிருக்கும்.

பவித்ராவின் பெற்றோர் இருவரும் டாக்டர்கள். போதாக் குறைக்கு, அவள் அண்ணன் குமாரும் மெடிக்கல் மூன்றாவது வருடம் படிக்கிறான். இவளும் டாக்டராக வேண்டுமென்பது அவளது குடும்பத்தின் கனவு - ஆனால் அவள் கனவு அல்ல. +2-வில் நல்ல மார்க் வேண்டுமே என்பது அவர்கள் கவலை. காசு கொடுத்து ஸீட் வாங்குவதில்லை என்பது அவர்கள் கொள்கை. இதெல்லாம் மட்டுமென்றால் பரவாயில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை ஷாலினியுடன் அவளை ஒப்பிடுவதுதான் அவளால் சகிக்க முடியாத விஷயம். ஷாலினியின் அம்மாவும் டாக்டர்தான். இரு அம்மாக்களும் ஒரே ஹாஸ்பிடலில் வேறு வேலை பார்க்கிறார்கள். சிறு வயதில் பவித்ராவும் ஷாலினியும் நல்ல தோழிகளாகத்தான் இருந்தார்கள். இந்த ஒப்பிடுதல் காரணமாக பவித்ரா கொஞ்சம் கொஞ்சமாக அவளிடமிருந்து விலகி விட்டாள்.

அன்று மாலை ஒரு ஸ்பெஷல் க்ளாஸ் இருந்தபடியால், வீட்டுக்குப் போக வழக்கத்தை விட கொஞ்சம் நேரமாகி விட்டது. நுழையும் போதே அம்மாவும், அப்பாவும் ஏதோ முக்கியமான விவாதத்தில் ஈடுபட்டிருப்பது புரிந்தது. அம்மா எதனாலோ அப்ஸெட்டாக இருந்தாள். அப்பா அவளுக்கு ஆறுதல் சொல்ல முயன்று கொண்டிருந்தார். ஆவல் அதிகரிக்க, ஒரு காதை இங்கே விட்டு விட்டு, உடை மாற்ற அறைக்குள் சென்றாள், பவித்ரா.

"உன் கையில இல்லாத விஷயத்துக்கு இப்ப வருத்தப் பட்டு என்ன பண்றது, சாரு? நீதான் பேஷண்ட்ஸ் மத்தில பிரபலமா இருக்க. உன்கிட்ட வர்றதுக்குத்தான் எல்லாம் விரும்பறாங்க. அப்படி இருக்கப்போ, நீலாவ மெட்டர்னிட்டி டிவிஷனுக்கு தலைமையாப் போட்டிருக்காங்கன்னா, எனக்கும் எதனாலன்னு புரியல. ஆனா நாம என்ன பண்ண முடியும்?"

அப்பாவின் கேள்விக்கு அம்மாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நீலா, ஷாலினியின் அம்மா.

மெளனமாக அடுக்களைக்குள் சென்று தானே கொஞ்சம் காஃபி போட்டுக் குடித்து விட்டு ஹோம் வொர்க் செய்யக் கிளம்பியவளை அப்பாவின் குரல் நிறுத்தியது:

"பவி, உனக்கு இன்னிக்கு ரிப்போர்ட் கார்ட் வந்திருக்குமே?"

ஒரு கணம் இன்னும் வரவில்லை என்று சொல்லி விடலாம் என்று தோன்றியது. எப்போதிருந்தாலும் தெரியத்தானே போகிறது என்று எண்ணியவள், "இதோ கொண்டு வர்றேம்ப்பா", என்று எடுத்து வரும் போதே தன்னை விளைவுகளுக்குத் தயார்ப் படுத்திக் கொண்டாள்.

"என்னம்மா இது, எப்போதும் போலத்தான் வாங்கியிருக்க. கணக்குல 100 வாங்குறது அவ்வளவு கஷ்டமா இருக்கா? அதுக்குத்தான் அடிக்கடி போட்டு ப்ராக்டிஸ் பண்ணனும். இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்துப் படின்னா கேட்கவே மாட்டேங்கிறியே", என்றார் அப்பா, மிகுந்த அதிருப்தியுடன்.

"ஷாலினியப் பாரு, எவ்வளவு நல்லாப் படிக்கிறா? அது மட்டும் இல்லாம பாடறது, டான்ஸ் ஆடறது, மத்தவங்களோடப் பழகறது, நீட்டா டிரஸ் பண்ணி க்கிறதுன்னு, அவள்ட்ட நீ கத்துக்கக் கூடியது எவ்வளவோ இருக்கு. இன்னும் ஆறு மாசம்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாமுக்கு. நீ இப்படிப் படிச்சா எப்படி காலேஜுல எடம் கிடைக்கும்?" என்று அம்மாவும் சேர்ந்து கொண்டாள்.

அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை, பவித்ராவுக்கு. "அப்பா, போன முறைய விட இப்ப எல்லா சப்ஜெக்டுலயும் கூட மார்க் வாங்கி இருக்கேன். அத ஏன் பார்க்க மாட்டேங்கிறீங்க? அம்மா, ஷாலினிய மாதிரி நான் இருக்கணும், அவ்வளவுதானே? அவளும் நானும் எக்ஸ்னோராவொட "ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் த பீச்" ப்ரோக்ராம்ல சேர்ந்திருக்கோம்ல? ஆனா உண்மையா பீச்ச சுத்தம் பண்றது நான் மட்டும் தான். அங்க போறதாச் சொல்லிட்டு அவ பாய் ஃப்ரெண்டோட ஊர் சுத்தப் போயிடுவா. நானும் அவள
மாதிரியே செய்யவா?"

அம்மா சுதாரித்துக் கொண்டு பதில் சொல்லும் முன், "நீங்க மட்டும் என்ன அவளோட ஒப்பிட்டே எப்போதும் பேசறீங்களே? நானும் அப்படிச் செய்ய ஆரம்பிச்சா என்ன ஆகும்? நீலா ஆண்ட்டி மட்டும் டிபார்ட்மெண்ட் ஹெட்டா ஆயிட்டாங்க, உங்களால ஏன் ஆக முடியல?”

“ஷாலினியோட அப்பா பிரபலமான ஹார்ட் சர்ஜனாகி சொந்தமா ஹாஸ்பிடல் வச்சு நடத்தராறே, ஏன் அப்பாவால அப்படிச் செய்ய முடியல? வேற யாரொடயோ ஹாஸ்பிடல்ல தான நீங்க வேல பார்க்கிறீங்க?"

"நான் நானாத்தான் இருக்க முடியும், ஷாலினியா மாற முடியாது. என்னால முடியற அளவு நான் உண்மையா முயற்சி செய்யறேன். அது புரிஞ்சுதுன்னா, இந்த ரிப்போர்ட் கார்ட்ல கையெழுத்துப் போட்டு வைங்க"

அம்மாவும் அப்பாவும் வாயடைத்து நிற்பதைப் பார்க்க பாவமாய்த்தான் இருந்தது அவளுக்கு. ஆனால் இனிமேல் ஒப்பிடும் படலம் இருக்காது என்ற நிம்மதியுடன் ரிப்போர்ட் கார்டை மேஜை மேல் வைத்து விட்டு அறைக்குத் திரும்பினாள், பவித்ரா.


--கவிநயா

10 comments:

  1. நியாயத்தை சொல்லிட்டீங்க..

    மெடிக்கல் படிக்கறதுக்கு கணக்கில் எதுக்கு 100 மார்க்? :)

    ReplyDelete
  2. //மெடிக்கல் படிக்கறதுக்கு கணக்கில் எதுக்கு 100 மார்க்?//

    ஹாஹா :) நல்ல கேள்வி. ஆனா மொத்த மார்க்கை தூக்கி விடறது அதுதானே? :)

    வருகைக்கு நன்றி, புபட்டியன்!

    ReplyDelete
  3. நன்றிங்க, யாத்திரீகன்!

    ReplyDelete
  4. ஆஹா அருமை கவிநயா.
    தொடர்ந்து எழுதுங்கள். :)

    ReplyDelete
  5. ரிஷான் அருமைன்னு சொன்னா, அருமையாதான் இருக்கணும் :) நன்றி, ரிஷான்!

    //தொடர்ந்து எழுதுங்கள்//

    எழுத விருப்பம்தான். முயற்சிக்கிறேன் :)

    ReplyDelete
  6. சின்ன நிகழ்ச்சி மூலமா அழகா கருத்தைச் சொல்லிட்டீங்க. இங்கே எங்க வீட்டுல அடிக்கடி இந்த விவாதம் வரும். நானோ என் மனைவியோ எங்க 5 வயது மகளை அவள் தோழியுடன் ஒப்பிட்டுச் சில நேரம் பேசுவோம். 'அவளைப் பார் இதைச் செய்கிறாள்; அதைச் செய்கிறாள்' என்று. அப்போதெல்லாம் மற்றவர் 'இப்படி எல்லாம் ஒப்பிட்டுப் பேசக்கூடாது' என்று சொல்லுவோம். ஆனாலும் நாம் சொன்ன அறிவுரையை நாமே மறந்துவிட்டு மீண்டும் ஒப்பிடலுக்குப் போவது நடக்கிறது. அந்த ஒப்பிடல் மனத்தில் தோன்றும் போதே அதனை நிறுத்த முயல வேண்டும். :-)

    ReplyDelete
  7. //ஆனாலும் நாம் சொன்ன அறிவுரையை நாமே மறந்துவிட்டு மீண்டும் ஒப்பிடலுக்குப் போவது நடக்கிறது. அந்த ஒப்பிடல் மனத்தில் தோன்றும் போதே அதனை நிறுத்த முயல வேண்டும். :-)//

    சரியா சொன்னீங்க, குமரன். எனக்கும் ஆரம்பத்தில் (என் மகனின் சிறுவயதில்) இந்தப் பழக்கம் இருந்தது. பிறகு மனதாலும் ஒப்பிடாமல் இருக்கப் பழகிக் கொண்டேன். பிள்ளைகள் நம்மைத் திருப்பிக் கேட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பேன். அதை வைத்துதான் இந்தக் கதை பிறந்தது :) வாசித்ததுக்கு நன்றி!

    ReplyDelete
  8. //ஆவல் அதிகரிக்க, ஒரு காதை இங்கே விட்டு விட்டு//

    நல்லாயிருக்கு இந்த வரிகள்...

    ReplyDelete
  9. //நல்லாயிருக்கு இந்த வரிகள்...//

    வருகைக்கு நன்றி ஸ்வர்ணரேக்கா :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)