Monday, March 31, 2008

என் கண்மணியே...

உன்னைச் சுமந்த நாள் முதலாய்
உனக்கென உயிர் சுமந்திருந்தேன்
உலகின் முதல் தாய் போலே
உள்ளம் இறு மாந்திருந்தேன்


நீ முகம் பார்த்துச் சிரிக்கையிலே
முத்த மழை நான் பொழிந்தேன்
நீ முதல் வார்த்தை பேசுகையில்
முத் தமிழோ என வியந்தேன்


தவழும் பிஞ்சுக் கால்களுக்கு
தண்டை யிட்டு அலங்கரித்தேன்
தாவி நெஞ்சில் உதைக்கையிலே
கால்கள் நோகும் எனத் தவித்தேன்


பால் நிலவைப் பொம்மையாக்கி
பாற் சோறு ஊட்டித் தந்தேன்
தென்றலிலே தொட்டில் கட்டி
தாலாட்டித் தூங்கச் செய்தேன்


அம்மா என்ற ழைக்கையிலே
அமுதம் என்ப தறிந்து கொண்டேன்
அன்றாடம் உன் நலமே
என் மூச்சாய் வாழ்ந்திருந்தேன்


உன்னைத் தந்த இறைவனுக்கு
உவகையுடன் நன்றி சொன்னேன்
புதையல் தந்த வள்ளலுக்கு
பாங்குடனே நன்றி சொன்னேன்


உடல் நலமின்றி இருக்கையிலே
உன் னருகில் நானிருப்பேன்
உடன் நலம் பெறவே வேண்டுமென்று
உறக்க மின்றி விழித்திருப்பேன்


உன் முகவாட்டம் கண்டு விட்டால்
உயிர் உருகக் கதறிடுவேன்
உன் ஆனந்தம் கண்டாலோ
மனம் நிறைந்து மகிழ்ந்திடுவேன்


கண்ண யர்ந்து உறங்கையிலும்
கனவி லுன்னைக் கண்டிருப்பேன்
உன் நினைவுகளைச் சேர்த்து வைத்து
நித்தம் நித்தம் நான் சுமப்பேன்


கடவுள் உன்னைக் காத்திடவே
காலமெல்லாம் துதித்திருப்பேன்
கண்மணியே உன் இன்பம்
காண்ப தற்கே தவமிருப்பேன்


விண் ணுலகம் சென்றிடினும்
உன் மனதில் வாழ்ந்திருப்பேன்
உயிர் மூச்சு நீங்கிடினும்
உந்தன் முகம் பார்த்திருப்பேன்


--கவிநயா

7 comments:

  1. அழகான
    அருமையான வரிகள்

    ReplyDelete
  2. நன்றி, திகழ்மிளிர்! உங்க பேர் வித்தியாசமா அழகா இருக்கு!

    ReplyDelete
  3. கவிநயா,

    எளிமையான, அருமையான நடை. நல்ல ஓசையுடனும் வந்திருக்கிறது கவிதை. ஒரு தாய்மையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  4. கவிதை படிச்சதுக்கும் பிடிச்சதுக்கும் நன்றி, சதங்கா!

    ReplyDelete
  5. உள்ளேன் அம்மா!

    கவிதை க்யூட்டா இருக்கு :-)

    ReplyDelete
  6. //கண்ண யர்ந்து உறங்கையிலும்
    கனவி லுன்னைக் கண்டிருப்பேன்
    உன் நினைவுகளைச் சேர்த்து வைத்து
    நித்தம் நித்தம் நான் சுமப்பேன் //

    அழகான வரிகள் கவிநயா :)

    ReplyDelete
  7. //கவிதை க்யூட்டா இருக்கு//

    நன்றி, சேது!

    //அழகான வரிகள் கவிநயா//

    அட, வாங்க ரிஷான்! வருகைக்கு நன்றி! :)

    ReplyDelete

நினைச்சுட்டீங்க! அதைச் சொல்லிடுங்க! :)